தேசிய பாதுகாப்பையும் கடல் வளங்களையும் பாதுகாக்க பல நடவடிக்கைகள் முன்னெடுப்பு
🔴குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் ஆறு மாதத் தடை.
தேசிய பாதுகாப்பும்,மீன் ஏற்றுமதியும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் நோக்கில், VMS (Vessel Monitoring System) விதிமுறைகளை மீறும் மீன்பிடி படகுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR) அறிவித்துள்ளது. மேலும் இவ்வாறான மீறல்களில் ஈடுபடும் மீன்பிடி படகுகளுக்கு ஆறு மாதங்கள் வரை மீன்பிடித் தடை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இலங்கையின் கடற்றொழில் துறையின் பேண்தகு தன்மையையும் நற்பெயரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதி முதல், வெளிநாட்டு கடல் எல்லைகளை சட்டவிரோதமாக மீறும் மீன்பிடி படகுகள் தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளன எனவும்
இந்த நடவடிக்கை, சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதை பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் மதிப்புமிக்க கடல் வளங்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் மில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான கடல் உணவு ஏற்றுமதி சந்தை ஆகியவற்றுக்கு ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதே அரசின் நோக்கமாகும்.இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை திரு. சுசந்த கஹவத்த வெளியிட்டுள்ளார்,மேலும் உயர் தரமான மீன் உற்பத்திக்காக இலங்கை உலகளாவிய ரீதியில் நல்ல நற்பெயரைப் பெற்ற நாடாகும். இந்தத் துறையானது எமது கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தின் உயிர் நாடியாகவும், தேசிய உணவுப் பாதுகாப்பின் முக்கிய தூணாகவும் திகழ்கிறது.ஆனால், ஒரு சிறிய குழுவினரின் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக, ஏற்றுமதி தடை போன்ற பாரதூரமான சர்வதேச விளைவுகளை மீண்டும் எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது. நாம் ஏற்கனவே ஒருமுறை அந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளோம். அதனை மீண்டும் அனுமதிக்க முடியாது,
என்று தெரிவித்துள்ளார்.மேலும், உலகின் மீன் வளம் என்பது இன்றைய தலைமுறைக்கு மட்டும் அல்ல; எதிர்கால சந்ததியினருக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொது சொத்து என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வளங்களை சர்வதேச சட்டங்களின் கீழ் பாதுகாத்து, பொறுப்புடன் பயன்படுத்துவது அனைவரின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.