அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் சந்திப்பு
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வெனிசூலா எதிர்க்கட்சித்
தலைவி மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தனது நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.
வெனிசூலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ (María Corina Machado), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், தனது நோபல் அமைதிப் பரிசுப் பதக்கத்தை அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.இச் சந்திப்பானது
வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது இதனை பரஸ்பர மரியாதையின் ஒரு சிறந்த அடையாளம் என ட்ரம்ப் பாராட்டியுள்ளார். வெனிசூலாவின் சுதந்திரத்திற்காக ட்ரம்ப் காட்டும் அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரமாக இப்பரிசு வழங்கப்படுவதாக மச்சாடோ குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது என நோபல் குழு தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு பதக்கம் அதன் உரிமையாளரை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் நோபல் பரிசு பெற்றவர் என்ற பட்டம் மாறாது என்று நோபல் அமைதி மையம் தெரிவித்துள்ளது.மேலும்
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.இவர் வெனிசூலாவின் முன்னாள் ஜனாதிபதி ஆவார் இருப்பினும், மெச்சாடோவை வெனிசூலாவின் புதிய தலைவராக அங்கீகரிக்க ட்ரம்ப் மறுப்பு தெரிவித்து வருகிறார். தற்போது இடைக்காலத் தலைவராகச் செயற்படும் டெல்சி ரோட்ரிக்ஸுடன் (Delcy Rodríguez) ட்ரம்ப் நிர்வாகம் இராஜதந்திரத் தொடர்புகளைப் பேணி வருகிறது.வெனிசூலாவின் எண்ணெய் துறை மீதான தடைகளை நீக்கி, அதனை மறுசீரமைக்கும் பணிகளில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 500 மில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் விற்பனையை அமெரிக்கா அண்மையில் நிறைவு செய்துள்ளது.
வெனிசூலாவில் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தத் தனது கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மெச்சாடோ ட்ரம்ப்பிடம் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அமெரிக்காவிற்கும் வெனிசூலா விற்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை சுட்டிக்காட்டிய அவர், நாம் ஜனாதிபதி ட்ரம்ப்பை நம்பலாம் எனத் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.அதேவேளை, வெனிசூலாவின் தற்போதைய பதில் தலைவரான டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவுடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குத் தான் தயாராக இருப்பதாகவும், வாஷிங்டனுக்குத் தலை நிமிர்ந்து விஜயம் செய்யத் தயங்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.