உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
உலகம் இன்று பல்வேறு வகையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியாவில் உருவாகியுள்ள முதலீட்டு வாய்ப்புகளை உலகளாவிய முதலீட்டாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அரசியல் ஸ்திரத்தன்மையும் உறுதியான நிர்வாகத்தையும் கொண்ட ஒரு தசாப்தத்தை இந்தியா இன்று எட்டி உள்ளதாக அவர் கூறினார். மற்றும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முக்கிய மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றும், விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இந்தியா முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா அபூர்வமான முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகக் கூறிய அவர், அந்த வளர்ச்சியில் குஜராத் மாநிலம் முக்கிய பங்காற்றி வருவதாகவும் வெளிவரும் சமீபத்திய புள்ளிவிபரங்கள், இந்தியாவிடமிருந்து உலகம் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருவதை தெளிவாக காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.உலகில் அதிகளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது என்பதுடன், அபிவிருத்தி, சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற நான்கு கோட்பாடுகளை மையமாகக் கொண்டு இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்து வருகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.இதனால், இந்தியாவிலும் உலகளாவிய ரீதியிலும் உள்ள அனைத்து முதலீட்டாளர்களும் இந்த அபார வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இதுவே மிகச் சரியான தருணம் என அவர் வலியுறுத்தினார்.