மீண்டும் வரியை அதிகரிக்க நேரிடும் - டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்கும் வரை ஐரோப்பிய கூட்டணி நாடுகள் மீது வரியை அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டென்மார்க்கின் மிகப்பெரிய ஆர்டிக் தீவான கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்கும் வரை ஐரோப்பிய கூட்டணி நாடுகள் மீது வரியை அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ் வரியானது
எதிர்வரும் மாதம் (பெப்ரவரி) 01ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து மற்றும் பிரிட்டனின் பொருட்களுக்கு மேலதிகமாக 10 வீத இறக்குமதி வரியை அதிகரிக்கப்போவதாக ட்ரம்ப்,
ட்ரூத் வன் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த நாடுகள் மீது வரி விதித்த நிலையிலேயே புதிய வரி பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இவ் வரியானது ஜூன் 1 ஆம் திகதி 25 வீதமாக அதிகரிக்கப்படும் என்றும் கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்கும் உடன்படிக்கை எட்டப்படும் வரை இந்த வரி தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செயல் முழுமையாக தவறானது என்று பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் குறிப்பிட்டிருப்பதோடு இதனை ஏற்க முடியாது என்ற பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பை அடுத்து ஐரோப்பிய ஒன்றியமும் நேற்று (18) பிரசல்ஸில் அவசர கூட்டத்தை நடத்தியது டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமாக உள்ள கிரீன்லாந்தை உரிமையாக்குவதைத் தவிர வேறு எந்த உடன்படிக்கைக்கும் இணங்கப்போதில்லை என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். எனினும் இந்த தீவு விற்பனைக்கு இல்லை என்று டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்ட கிரீன்லாந்து பல வளங்களை கொண்டுள்ளது. இத் தீவானது வட அமெரிக்கா மற்றும் ஆர்டிக்கிற்கு இடையே அமைந்திருக்கின்றது. இந்தத் தீவு ஏவுகணை தாக்குதல்கள் தொடர்பில் முன்கூட்டிய எச்சரிக்கைக்கு மற்றும் பிராந்தியத்தில் கப்பல்களை கண்காணிப்பதற்கு பொருத்தமான இடமாக உள்ளது.மேலும் இந்த நிலத்தை இலகுவான வழியிலோ அல்லது மோசமான வழியிலோ அமெரிக்கா பெறும் என்று ட்ரம்ப் முன்னதாக எச்சரித்திருந்தார்.இதற்காக ஐரோப்பிய நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளன. ஆர்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நேட்டோவின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும் என்று இந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் உளவு பணிக்கு என்று குறிப்பிட்டு பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், நோர்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் சிறு எண்ணிக்கையான தமது துருப்புகளை கிரீன்லாந்தில் நிலைநிறுத்தியுள்ளன. இந்த நாடுகள் அபாயகரமான ஆட்டத்தை ஆடி வருவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.