முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன் விளக்கமறியலில்..
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன் ஜெரம் கெனத் பெர்னாண்டோ ஆகியோர் எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (05) ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிதி குற்ற விசாரணை பிரிவு விடுத்த அழைப்பின் பேரில் வாக்குமூலம் வழங்க முன்னிலையான நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன் ஜெரம் கெனத் பெர்னாண்டோ ஆகியோர் முற்பகல் கைது செய்யப்பட்டனர்.
அரச சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மற்றொரு மகன் ஜொஹான் பெர்னாண்டோவும் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இவர்களுக்கு உதவியதாக கூறப்படும் சதொச நிறுவனத்தின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமல்லவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, அமரசேகர மாவத்தையில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றை தொடர்பாக 2015 நவம்பர் மாதத்தில் நிதி குற்ற புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.