78வது சுதந்திர தினத்தில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திய ஜனாதிபதி

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேசிய இலக்கை அடைவதற்கு, இன, மத, பிரதேச வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

பல சவால்களுக்கிடையே பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு முன்னேறி வரும் ஒரு முக்கிய தருணத்தில், இவ்வாண்டு சுதந்திர தினம் கொண்டாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடனும் உறுதியுடனும் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும்

சவால்கள் இருந்த போதிலும், ஒருமைப்பாடு மற்றும் கூட்டுச் செயற்பாட்டின் மூலம், தூய்மையான அரசியல் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட அழகான இலங்கையை உலகளவில் அடையாளப்படுத்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் பயன்கள், அனைத்து மாகாணங்களிலும் வாழும் அனைத்து இன சமூகங்களுக்கும் சமமாக சென்றடைவதை உறுதி செய்வதே அடுத்த கட்ட முக்கிய இலக்கு என அவர் கூறினார். அந்த இலக்கு நிறைவேறாவிட்டால், அபிவிருத்தி செயல்முறை முழுமையான வெற்றியை அடையாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.அண்மையில் நாடு சந்தித்த பாரிய இயற்கை அனர்த்தம் மக்களுக்கு வேதனையளித்திருந்த போதிலும், கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட வலுவான அடித்தளங்களும், அனைத்து தரப்பினரின் ஆதரவும்காரணமாக, இயல்பு நிலைக்கு திரும்பும் பணிகள் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டங்களில், நாட்டை சரியான பாதையில் வழிநடத்த கிடைத்த பல வரலாற்று வாய்ப்புகள் தவறவிடப்பட்டதாக நினைவூட்டிய ஜனாதிபதி, இம்முறை அந்தப் பிழையை மீண்டும் செய்யாமல், இலங்கையை மேலும் வலிமையானதும் கௌரவமிக்கதுமான நாடாக மாற்றுவதற்கு உறுதியுடன் செயல்படுவோம் எனத் தெரிவித்தார்.

பெருமைமிக்க கலாசாரம், பண்டைய வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதனடிப்படையிலேயே எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.20ஆம் நூற்றாண்டில் கலைந்த கனவுகளை, 21ஆம் நூற்றாண்டில் நனவாக்கி, மக்கள் எதிர்பார்க்கும் முன்னேறிய, வளமான இலங்கையை கட்டியெழுப்பும் புதிய காலகட்டம் உருவாகும் என தாம் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.மேலும் இதற்காக நாட்டின் மக்கள் அனைவரின் வலிமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதிப்பாட்டில் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், கடந்த காலத்தில் தவறவிட்ட வெற்றிகளை மீட்டெடுத்து, அனைவரின் கனவான வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற இலக்கை அடைவதற்கு ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் உறுதியுடன் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்தார்.இவ்வாறு, சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றும் வகையில், அர்த்தமுள்ள மற்றும் ஊக்கமளிக்கும் தேசிய சுதந்திர தினம் அமைய வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660