மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுங்கள்-பிரதமர்
விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தை உருவாக்குவதற்காக, தனிநபர் ரீதியிலும், சமூக ரீதியிலும் அனைவரும் தாய்நாட்டிற்கான தங்களது பங்களிப்பை வழங்க வேண்டிய முக்கிய தருணம் இது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
78வது சுதந்திர தினம், ஒரு புதிய சுதந்திரம் குறித்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் கொண்டாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மக்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் உருவான மக்கள் அரசாங்கத்துடன், நாடு தற்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.மானிடப் பண்புகள் நிறைந்த, திறமைமிக்க மற்றும் அறிவார்ந்த எதிர்காலச் சந்ததியினருக்காக தேசத்தை கட்டியெழுப்பும் பணிகள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.விழுமியங்கள் அடிப்படையிலான ஒரு இலங்கையை உருவாக்குவதற்கு, தனிப்பட்ட முயற்சிகளும், கூட்டுப் பங்களிப்புகளும் இன்றியமையாதவை என்றும், அந்தப் பொறுப்பை ஒவ்வொரு குடிமகனும் தாய்நாட்டிற்காக ஏற்க வேண்டிய காலம் இது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பலமான பொருளாதார அடித்தளத்தின் மீது நாட்டை நிலைநிறுத்துதல், புதிய அரசியல் கலாசாரத்தின் வழியாக அரசியல் மற்றும் அரசியல்வாதி குறித்த புதிய முன்மாதிரியை உருவாக்குதல், இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புதல் ஆகியவை அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளாக இருப்பதாக அவர் கூறினார்.மேலும், கிராமிய வறுமையை ஒழித்தல், பாதிப்புக்குள்ளான அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடிய எந்த குடிமகனும் புறக்கணிக்கப்படாத வகையில் சமூக நலப் பொறிமுறைகளை வலுப்படுத்துதல், அத்தியாவசிய சமூகக் குழுக்களுக்கான அணுகலை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.அத்துடன், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், உலக நாடுகளுடன் நம்பகமான உறவுகளைப் பேணும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையின் ஊடாக இலங்கையை மீண்டும் சர்வதேச வர்த்தக நாமமாக நிலைநிறுத்த அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த தேசிய இலக்குகளை அடைவதற்காக குறுகிய அரசியல் நோக்கங்களை புறக்கணித்து, ஒட்டுமொத்த தேசத்தின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார்.இதன் அடிப்படையில், 78வது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில், அனைத்து இலங்கை மக்களும் திடமான நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஒன்றிணைந்து, மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.