சுதந்திரத்தை வலுப்படுத்த ஒற்றுமை அவசியம்,எதிர்க்கட்சித் தலைவர்

1948 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை பெற்ற சுதந்திரத்திற்கு 78 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருணம், கடந்த காலத்தை மீளாய்வு செய்வதோடு எதிர்காலப் பாதையை தெளிவாக நோக்க வேண்டிய முக்கியமான காலகட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நாட்டின் 78வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 78 ஆண்டுகளைக் கட்சி அரசியல் சார்புகளின்றி ஆய்வு செய்தால், இலங்கை பல்வேறு துறைகளில் அடைந்த வெற்றிகளையும், அதே நேரத்தில் எதிர்கொண்ட பின்னடைவுகளையும் தெளிவாகக் காண முடியும் என அவர் குறிப்பிட்டார். அந்த அனுபவங்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து, நிகழ்காலச் செயல்பாடுகளை வடிவமைப்பதே சிறந்த எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.ஜனநாயகத்தை பாதுகாப்பது, பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது, சுகாதாரம், கல்வி, சமூக ஒழுக்கம் மற்றும் கலாசார பாரம்பரியங்களை மேம்படுத்துவது போன்ற துறைகளில் கடந்த ஆண்டுகளில் பல பாராட்டத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில், வடக்கும் தெற்கும் ஏற்பட்ட இளைஞர் எழுச்சிகளுடன் தொடர்புடைய இரண்டு உள்நாட்டு போர்கள், நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் அடைய வேண்டிய முழுமையான வெற்றிகளைப் பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன் தாக்கமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் மக்களின் வாழ்க்கைத் தரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது என்பதையும் உணர வேண்டிய அவசியம் உள்ளது என அவர் தெரிவித்தார்.மேலும் பகுத்தறிவற்ற அரசியல் முடிவுகள், அதிகாரத்தை மையமாகக் கொண்ட குறுகிய அரசியல் நோக்கங்கள் மற்றும் அதனடிப்படையில் நிகழ்ந்த ஆட்சிமாற்றங்கள், நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளன என்றும், இவற்றை சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ஆழமாக சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.உலக மகிழ்ச்சி குறியீட்டிலும், மனித வளர்ச்சிக் குறியீட்டிலும் அளவிடப்படும் முக்கியமான அளவுகோள்களான தனிநபர் வருமானம், சுகாதாரமான ஆயுள் எதிர்பார்ப்பு, உடல் மற்றும் மனநலம், சமூக ஒத்துழைப்பு, வாழ்க்கைத் தீர்மானங்களில் உள்ள சுதந்திரம், கொடைத்தன்மை மற்றும் ஊழல் இல்லாமை போன்ற அம்சங்களில், இன்றைய நிலை திருப்திகரமானதாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.சுதந்திரம் பெற்றபோது எதிர்பார்த்த சுதந்திர சமூகம், சுதந்திர பொருளாதாரம் மற்றும் சுதந்திர வாழ்க்கை மட்டுமன்றி, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின் இறையாண்மை ஆகிய விடயங்களும் இன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய சவால்களாகவே உள்ளன என அவர் தெரிவித்தார்.

இந்த விடயங்களை குறுகிய அரசியல் கோணத்தில் பார்க்காமல், ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்கான பொறுப்பாகக் கருதி அணுக வேண்டும் என்றும், பெற்ற சுதந்திரத்தை எதிர்கால சந்ததியினருக்காக வலுப்படுத்தி பேணுவது நமது கடமை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

அதற்காக ஜனநாயகப் பாதையில் நம்பிக்கை கொண்ட அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், 78வது சுதந்திர தினத்தின் போது அரசியல், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இனம், மதம் அல்லது வேறு வேறுபாடுகளால் பிரியாமல், ஒற்றுமையின் அடிப்படையிலேயே இலங்கை சுதந்திரத்தைப் பெற்றதாக நினைவூட்டிய அவர், இன்றைய காலகட்டத்திலும் நாட்டிற்கு அவசியமானது அதே ஒற்றுமைதான் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660