அனைத்து இனங்களும் நிம்மதியாக வாழும் சூழலே உண்மையான சுதந்திரம் ரிஷாட் பதியுதீன்
இலங்கை தாய்நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில், நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் அமைதியாகவும் சுபீட்சமாகவும், பரஸ்பர புரிதலும் விட்டுக்கொடுப்பும் கொண்ட சூழலில் நிம்மதியாக வாழ முடியும் நிலை உருவாகினால்தான் அது உண்மையான சுதந்திரமாக அமையும் என முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.மேலும்
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை சுதந்திரம் பெறுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இனங்களைச் சேர்ந்த தலைவர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த தலைவர்கள் நாட்டுக்கு வழங்கிய தியாகங்களையும் பங்களிப்புகளையும் நினைவுகூர்வது இன்றைய காலத்தின் அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடு சுதந்திரம் பெற்றுத் தற்காலம் 78 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், இலங்கையில் வாழ்ந்த ஆரம்ப கால முஸ்லிம்கள் தமது ஆற்றலுக்கு ஏற்ப பல்வேறு துறைகளிலும் பல்வேறு நிலைகளிலும் நின்று நாட்டின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளனர் என்பதை இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எடுத்துரைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக, இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்தை பேணுவதிலும், அதனூடாக உள்நாட்டு விவசாயம் உள்ளிட்ட பல துறைகளின் வளர்ச்சிக்கு துணை நிற்பதிலும் முஸ்லிம்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். சிங்கள மன்னர்களின் காலத்திலிருந்தே பின்னர் கால அரசியல் வரை, நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர்கள் பல பொறுப்புகளை ஏற்று செயற்பட்டுள்ளனர் என்ற உண்மையை எவராலும் மறக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நாட்டில் வாழும் சகல இனங்களும் நாட்டுப்பற்றுடன், அச்சமின்றி, மன நிம்மதியுடன் வாழும் சூழல் எப்போது உருவாகிறதோ, அப்போதுதான் இலங்கை உண்மையான சுதந்திரத்தை அடைந்ததாக பொருள் கொள்ளலாம் எனவும், அந்த இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனவும் ரிஷாட் பதியுதீன் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
— ரிஷாட் பதியுதீன் ஊடகப் பிரிவு