இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைவதற்கான விண்ணப்பங்கள் திறப்பு
இலங்கையின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்பும் நோக்கில், பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த ஆசிரியர் நியமனங்களுக்கு, தற்போது அரச சேவையில் பணியாற்றி வரும் பட்டதாரிகளும், அரச சேவைக்கு வெளியில் உள்ள பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கான இணையவழி விண்ணப்ப முறைமை நாளை (05) முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். இந்த காலப்பகுதிக்குள் தகுதியுள்ளவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.அதேநேரம், அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளுக்கான விண்ணப்ப முறைமை பெப்ரவரி 20 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, மார்ச் 05 ஆம் திகதி முற்பகல் 9.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இந்த வாய்ப்பிற்கு ஆண், பெண் என இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் அனைத்தும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இணையத்தளத்தில் உள்ள “Our Services” பிரிவின் கீழ் காணப்படும் “Online Applications – Recruitment Exams / E.B. Exams” என்ற தெரிவை பயன்படுத்தி விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும்.அரச வர்த்தமானி அறிவித்தலின் படி, இந்த நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையூடாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுடன், ஏனைய எந்த முறைகளிலும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான தகுதி, பாடப்பிரிவுகள் மற்றும் பிற விரிவான தகவல்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.