நாட்டின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக எல். எஸ். ஐ. ஜயரத்ன நியமனம்
நாட்டின் 42ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல். எஸ். ஐ. ஜயரத்னவுக்கான அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கையளிக்கப்பட்டது.
இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வழங்கினார். இதற்கு முன்னர் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சிரேஷ்ட பிரதிக் கணக்காய்வாளராக பணியாற்றி வந்த திருமதி ஜயரத்ன, இந்த முக்கிய பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு பெப்ரவரி 03ஆம் திகதி கூடிய அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக ஒப்புதல் வழங்கியது.கடந்த காலமாக கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றிய சூலந்த விக்ரமரத்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, திருமதி எல். எஸ். ஐ. ஜயரத்னவின் பெயரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருந்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் கணக்காய்வாளர் நாயக பதவியை வகிக்கும் முதல் பெண்ணாக திருமதி ஜயரத்ன வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளார்.மேலும் அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் (சிறப்பு) மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) பெற்றுள்ளதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் அரச நிதி கணக்காளர்கள் சங்கத்தின் செயலில் உள்ள உறுப்பினராகவும் திகழ்கிறார்.
— ஜனாதிபதி ஊடகப் பிரிவு