வதந்திகளை நம்ப வேண்டாம் என பிரதமர் வலியுறுத்தல்

புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு தேவையான ஸ்மார்ட் போர்டுகளை கல்வி அமைச்சு விநியோகிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதற்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் பணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெளிவாக அறிவித்துள்ளார்.நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இலவசக் கல்வியை குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ அரசாங்கம் எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவது பொருத்தமல்ல எனக் கூறிய பிரதமர், இலவசக் கல்வி தொடர்பான விவகாரங்களில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவானது என தெரிவித்தார்.விக்ரமாராச்சி மருத்துவ பீடம் உரிய விதிமுறைகளின்றி ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக, அங்கு பயிலும் மாணவர்கள் இன்று சிக்கலான நிலைமைக்கு முகங்கொடுத்து வருவதாகவும், இது அரசியல் தீர்மானம் அல்ல,நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பிரதமர் விளக்கினார்.மேலும் இந்த ஆண்டுக்குள் பாடசாலைகளுக்கு தேவையான ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படும் என்றும், இதற்காக எந்தச் சூழலிலும் பெற்றோரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே பாடசாலைகளில் பணம் வசூலிக்க வேண்டாம் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

1 முதல் 5ஆம் தரம் வரை தகவல் தொழில்நுட்பம் தனிப்பாடமாக கற்பிக்கப்படாது எனக் கூறிய பிரதமர், குழந்தைகளின் வயதுக்கும் பாதுகாப்புக்கும் ஏற்ற வகையில் தொழில்நுட்ப அறிவை வழங்குவது குறித்து நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பாடத்திட்டங்கள் அரசியல் அடிப்படையில் அல்லாது, சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் ஆலோசனையின் பேரிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். அதேபோல், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் காணப்படும் அத்தியாவசிய கல்விசார் வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அங்கீகாரத்துடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும், ஆசிரியர் சேவை உருவாக்கப்பட்டு 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதன் தரத்தை மேம்படுத்துதல், பதவி உயர்வு மதிப்பீட்டில் காணப்படும் சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் சேவை மூப்பின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாத பிரச்சினைகளை சரி செய்வதற்காக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் பல நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

பாடப்புத்தகங்கள், சீருடைகள், சுரக்ஷா காப்புறுதி வழங்கப்பட்டுள்ளதுடன், 6 முதல் 13ஆம் தரம் வரை பயிலும் மாணவிகளுக்கான சானிட்டரி நாப்கின் கொள்வனவுக்காக வவுச்சர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டமும் நடைமுறையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தும் அஸ்வெசும நன்மைகளைப் பெறாத மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனை மேலும் விரிவுபடுத்த கல்வி அமைச்சு தேவையான தரவுகளை சேகரித்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் காலப்பகுதி ரமழான் மாதமாக இருந்தாலும் பரீட்சை நடத்துவதில் எந்தத் தடையும் இருக்காது என சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், புலமைப்பரிசில், க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை ஒழுங்கான கால அட்டவணைப்படி நடத்த 2026ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660