2027 வரை கொடுப்பனவுகள் உயராது ஜனாதிபதி உறுதியான அறிவிப்பு
2027 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்படும் வரை, அரச ஊழியர்களுக்கான எந்தவொரு கூடுதல் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெளிவாகக் கூறியுள்ளார்.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கண்டி மாவட்ட வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வு நேற்று காலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக மொத்தமாக 33,000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.மேலும் 2025 ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பள உயர்வுக்காக 11,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அதே அளவு தொகை செலவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது கட்டமாக மேலும் 11,000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் கூறினார்.இந்த மூன்று கட்டங்களும் நிறைவு பெறும் போது, அரச சேவையின் சம்பள உயர்வுக்காக மட்டும் அரசுக்கு ஏற்படும் செலவு 33,000 கோடி ரூபாவாக இருக்கும் என ஜனாதிபதி விளக்கினார்.
இவ்வாறு அடிப்படைச் சம்பள உயர்வுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ள நிலையில், மீண்டும் பல்வேறு கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதைத் தான் காண்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.2027 ஆம் ஆண்டில் மூன்றாவது சம்பள உயர்வு வழங்கப்பட்ட பின்னர், அதனால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்த பின்னரே ஏனைய கொடுப்பனவுகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும், அதுவரை எந்தவொரு போராட்டங்களோ அல்லது ஆர்ப்பாட்டங்களோ முன்னெடுக்கப்பட்டாலும், கொடுப்பனவுகளை அதிகரிக்கும் தீர்மானம் எடுக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
மேலும், டித்வா புயலால் நாடு கடுமையான பொருளாதார பாதிப்பைச் சந்திக்கும் என சிலர் எதிர்பார்த்திருந்த போதிலும், இரண்டு மாதங்களுக்குள் மின்சாரம், வீதி, தொடர்பாடல் மற்றும் நீர் வழங்கல் போன்ற அத்தியாவசிய சேவைகள் பெரும்பாலும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.மேலும் நாடு அடையும் பொருளாதார முன்னேற்றங்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொடுப்பதே அரசின் பிரதான நோக்கமாக இருப்பதாக அவர் கூறினார். அதேபோல், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவது அரசின் முக்கிய இலக்காகும் எனவும் வலியுறுத்தினார்.
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கான புதிய சட்டம் தயாராகி வருவதாகவும், பணமோசடியைத் தடுக்கும் வகையில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப சட்டம் கொண்டு வர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சட்டத்தின் எல்லை ஒன்று உள்ளது. அந்த எல்லைக்குள் தான் அனைவரும் இருக்க வேண்டும். யாரும் சட்டத்திற்கு மேலாகச் செயல்பட முடியாது. அத்தகைய ஒரு நாட்டை உருவாக்குவதே எமது இலக்கு. இந்த மாற்றம் தவறு செய்பவர்களுக்கு வலியளிக்கலாம். ஆனால் அந்த மாற்றத்தை நாங்கள் நிறுத்தப் போவதில்லை, என ஜனாதிபதி தனது உரையை நிறைவு செய்தார்.