கங்காராம விகாரையில் புனித சின்னங்கள் சஜித் பிரேமதாச தரிசனம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்கள் தரிசிக்கக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்களை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மனைவி ஜலனி பிரேமதாச உடன் நேரில் தரிசித்து வழிபட்டார்.
இந்த புனித சின்னங்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியின் மூலம், புத்த பெருமானின் பிறந்த இடமாகக் கருதப்படும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது. இவை ‘தெவ்னி மோரி’ புனித சின்னங்கள் என்ற பெயரில் அறியப்படுகின்றன.
இலங்கை வாழ் பௌத்த மக்களுக்கு இந்த அரிய புனித சின்னங்களை வழிபடும் வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை எதிர்க்கட்சித் தலைவர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
மேலும், இந்த புனித சின்னங்களை பொதுமக்கள் தரிசிப்பதற்கான ஏற்பாடுகள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், தினமும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.