பாடசாலை போக்குவரத்து சேவையை சட்ட ரீதியாக ஒழுங்குபடுத்த அரசு திட்டம்
பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறையான கட்டமைப்பிற்குள் கொண்டு வருவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று, இன்று (09) முற்பகல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்றிருந்ததுடன், பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டது.அதற்குரிய விதிமுறைகளின் வரைவு தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்கள் மற்றும் கூடுதல் முன்மொழிவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.மேலும் புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை மறுசீரமைப்புச் செயல்முறையால் உருவாகும் போக்குவரத்துத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது, மாணவர் போக்குவரத்தில் காணப்படும் தற்போதைய சிக்கல்களை குறைத்து ஒரு ஒழுங்கான போக்குவரத்துப் பொறிமுறையை உருவாக்குவது மற்றும் “சிசு செரிய” பாடசாலை போக்குவரத்து சேவையை மேலும் வினைத்திறனுடனும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சட்ட விதிமுறைகள் அறிமுகப்படுத்துதல், சிறுவர் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி போக்குவரத்து சேவையின் போது இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுக்கும் நடைமுறைகள், மாணவர் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்தி அதனை பொறுப்புமிக்க சேவையாக மாற்றுவது உள்ளிட்ட விடயங்களும் கவனத்திற்கெடுக்கப்பட்டன.
அத்துடன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால உள்ளிட்ட ஆணைக்குழு அதிகாரிகள், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.