தாழமுக்கம், திருகோணமலையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது; அதன் தாக்கம்
கடும் காற்று மற்றும் கனமழை எச்சரிக்கை,வட பகுதியில் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் சாத்தியம்
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றும் கனமழையும் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10) அதிகாலை 5.30 மணிக்கு வெளியிட்ட விசேட அறிவிப்பில், இன்று அதிகாலை 4.00 மணி நிலவரப்படி இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் திருகோணமலைக்கு வடக்கு–வடமேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதுடன், இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) வலுவிழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இன்று பகல்வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக் கரையை கடந்து நாட்டின் ஊடாக நகரும் வாய்ப்பு அதிகம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்படும் வானிலை நிலைமை
பலத்த காற்று:
வட மாகாணத்தில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் சாத்தியமும் காணப்படுகிறது.
அதேவேளை, வடமத்திய, மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு
40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட கனமழை பெய்யக்கூடும்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 50-100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்படக்கூடிய பாதிப்புகள்
இந்த வானிலை நிலைமையால் தற்காலிக குடியிருப்புகள் மற்றும் இலகுவான கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
கூரைத் தகடுகள் காற்றில் பறந்து செல்லுதல், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படுதல், பெரிய மரங்கள் சாய்தல் அல்லது கிளைகள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடும்.
மேலும், நெற்பயிர்கள், வாழை, பப்பாசி உள்ளிட்ட பயிர்கள் மற்றும் பழத்தோட்டங்களுக்கு சேதம் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. தாழ்நிலப் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும், கரையோரப் பகுதிகளில் கடல் நீர் ஊடுருவும் சாத்தியமும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள்
கரையோரப் பகுதிகளில் உள்ள குடிசை வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் வெள்ள அபாயம் உள்ள தாழ்நிலங்களில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், இடி மின்னல் ஏற்படும் போது மின் சாதனங்கள் மற்றும் தொலைபேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைப்பாங்கான வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடல் நடவடிக்கைகள்,மீனவர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பிலிருந்து புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரை உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்கள்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் 24 மணிநேர சேவை மூலம் மேலதிக தகவல்களை பெறலாம்.
0112 686 686
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய அபாயங்களை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.