மட்டக்களப்பில் அம்பியூலன்ஸ் விபத்து: மின்கம்பம் சேதம்,மின்சாரம் துண்டிப்பு, இருவர் படுகாயம்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று ஏற்பட்ட விபத்தில் அம்பியூலன்ஸ் வண்டி மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் குறித்த பிரதேசத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்தின் போது மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து நொறுங்கியதுடன், அம்பியூலன்ஸ் வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் அம்பியூலன்ஸ் சாரதி உட்பட உதவியாளர் கடுமையாக காயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டி, கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி மின்கம்பத்திலும் அருகில் இருந்த பனைமரத்திலும் மோதியதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த அம்பியூலன்ஸ் வண்டி சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமானதுடன், அதன் பெறுமதி சுமார் ரூ. 1 கோடி 75 இலட்சம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.