பேரிடர்களை காரணம் காட்டி ஒளிவதில்லை,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவுப்பு
பேரிடர்களையும் தொற்றுநோய்களையும் காரணம் காட்டி பொறுப்பிலிருந்து தப்பிக்கும் அரசியல் யுகம் முடிவடைந்துவிட்டதாகவும், அனர்த்தங்களுக்கு மத்தியில் மீண்டும் எழுந்து, முன்னதைவிடச் சிறந்ததொரு நாட்டை மக்களுக்குக் கட்டியெழுப்புவோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.அனைத்துத் துறைகளிலும் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி, நாட்டை நிலையான அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல அரசாங்கம் வகுத்துள்ள வேலைத்திட்டங்களை முடக்குவதற்கோ, பின்னடைவதற்கோ இயற்கை அனர்த்தங்களை மறைப்பாகப் பயன்படுத்தப் போவதில்லை என அவர் வலியுறுத்தினார்.நாட்டை மீளக் கட்டியெழுப்பும் இந்த வரலாற்றுப் பணியில் அரசாங்கம், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் லோட்டஸ் அரங்கில் நேற்று காலை நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.Rebuilding Sri Lanka, மீளெழுச்சிக்கான தேசிய முயற்சி சமீபத்தில் நாட்டை தாக்கிய தித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரழிவுகளுக்குப் பிந்தைய புனர்வாழ்வு மற்றும் மீளமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவே Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டத்திற்காக பெறப்படும் நிதி, நன்கொடைகள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை வெளிப்படையாக வழங்கும் www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையதளமும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.
பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் உறுதிப்படுத்தும் தளமாக இது செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் உரையின் முக்கிய அம்சங்கள்
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு மெதுவாக மீண்டு வந்துகொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டோம். 2025 ஆம் ஆண்டு நாட்டின் சட்டத்தின் ஆட்சி மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான முக்கிய திருப்புமுனையாக அமையும் என நம்பிய நேரத்தில் இந்த சவால் ஏற்பட்டது.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் மாறாது
இந்த அனர்த்தத்தை காரணம் காட்டி எமது வேலைத்திட்டங்களையோ, வரவு செலவுத் திட்டத்தையோ மாற்றமாட்டோம். டிசம்பர் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதே வரவு செலவுத் திட்டமே நடைமுறையில் இருக்கும். இதற்காக மேலதிகமாக ரூ. 500 பில்லியன் மதிப்பிலான Supplementary Estimate ஒன்றையும் கொண்டு வந்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட மக்களே முதன்மை
அனர்த்தங்கள் எல்லோரையும் தாக்கினாலும், பாதிக்கப்பட்டவர்களில் 80% க்கும் அதிகமானோர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களே. அவர்களை பழைய நிலைக்கு கொண்டு செல்வது மட்டுமல்ல, அதைவிடச் சிறந்த வாழ்க்கை நிலையை வழங்குவதே எமது நோக்கம்.வீடமைப்பில் பெரிய தீர்மானங்கள் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 5 மில்லியன் வழங்கப்படும்.பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு எந்த மதிப்பீடும் இன்றி ரூ. 5 இலட்சம் வழங்கப்படும்.2026 ஆம் ஆண்டிற்குள் 50,000 க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டியெழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டை காப்பது, எதிர்காலத்திற்கான கடமை
நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாடு பல ஆண்டுகளாக கடுமையான அழிவை சந்தித்துள்ளது. அங்கிருந்து பாயும் 103 ஆறுகளும் இன்று பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்கால தலைமுறைகளுக்காக மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதே எமது முக்கிய முன்னுரிமை.
நிதி ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை
பொதுமக்களும் வெளிநாடுகளும் வழங்கும் ஒவ்வொரு ரூபாவிற்கும் நான் நேரடியாகப் பொறுப்பேற்கிறேன். நிதி ஒழுக்கமும் வெளிப்படைத்தன்மையும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், வெளிநாட்டு தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.