டாவோஸ் மாநாட்டிற்கு இலங்கை குழுவை வழிநடத்தும் பிரதமர் ஹரிணி அமரசூரிய
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மன்ற மாநாட்டில், சிறிலங்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்டக் குழுவிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிடவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முக்கிய சர்வதேச மாநாட்டில், பிரதமருடன் பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். டாவோஸ் பயணத்தின் போது, உலகின் பல நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதாகவும், அவற்றின் போது சிறிலங்காவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பது, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது போன்ற முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் அரசியல், பொருளாதாரத் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் இந்தப் புகழ்பெற்ற டாவோஸ் மாநாடு, எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிதாகப் பதவியேற்றிருந்த காரணத்தால் கடந்த ஆண்டு இந்த மாநாட்டில் சிறிலங்கா தலைவர்கள் பங்கேற்கவில்லை என்றும், இந்த ஆண்டு பிரதமர் தலைமையிலான உயர் மட்டக் குழு பங்கேற்பது நாட்டின் சர்வதேச ஈடுபாட்டில் முக்கிய திருப்பமாகும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த உலகளாவிய மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது,இச் செய்தியானது டாவோஸ் மாநாட்டின் மீதான உலக கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது.