ஹர்ஷா அபேவிக்ரம நீக்கம் குறித்து பரவும் தகவல்கள் உண்மையற்றவை,அமைச்சு விளக்கம்
விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனம் (AASL) நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரம தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் சில தகவல்கள் அடிப்படையற்றவை என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய பாணகல உபதிஸ்ஸ தேரர், விமான நிலைய முனையத்திற்குள் நுழைவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட அனுமதிப்பத்திரத்தை நீடிக்குமாறு கோரிய கடிதமே முன்னாள் தலைவர் நீக்கத்திற்குக் காரணம் என சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதியன்று, இலங்கை மகாபோதி சங்கத்தின் கடிதத் தலைப்பில் பாணகல உபதிஸ்ஸ தேரர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதில், தமக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த விசேட அனுமதிப்பத்திரம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் நிலையில், அதனை அடுத்த ஆண்டிற்கும் நீடிக்குமாறு அவர் கோரியிருந்தார்.
தேரரின் சர்வதேச சமய நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அனுமதிப்பத்திரத்தை நீடிக்குமாறு அமைச்சர் அந்தக் கடிதத்தில் குறிப்பொன்றை இட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக அதனை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரமவிடம் அனுப்பியிருந்தார்.அவ் விசேட அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களை முன்னாள் தலைவர் அமைச்சரிடம் விளக்கியதை அடுத்து, தகுந்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.
அதன்படி, கடந்த மாதம் 9 ஆம் திகதியன்று பாணகல உபதிஸ்ஸ தேரருக்கு முன்னாள் தலைவர் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலேயே நிறைவேற்றப்பட்டதுடன், இது தொடர்பாக அமைச்சர் மற்றும் முன்னாள் தலைவர் இடையே எவ்வித கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை என்றும் அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் நிர்வாக கட்டமைப்பில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட சில காரணங்களினால் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் இதன் அடிப்படையில், கடந்த 21 ஆம் திகதி அமைச்சர் மற்றும் ஹர்ஷா அபேவிக்ரம இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அவர் தலைவர் பதவியிலிருந்து விலகச் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, பாணகல உபதிஸ்ஸ தேரருக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பான கடிதத்திற்கும், முன்னாள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரமவின் பதவி நீக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.