புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மொனராகலையில் பிரதமர் ஆய்வு
நேற்று காலை மொனராகலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதமர்,அங்குள்ள பாடசாலைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களை நேரில் பார்வையிட்டார்.கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான பிரதமர், குறிப்பாக தரம் 01 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கற்றல் முறைமைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
இதன் போது, கும்புகான ஸ்ரீ ஷண்முக தமிழ் மகா வித்யாலயம் மற்றும் மதுருகேட்டியா மகா வித்யாலையா ஆகிய பாடசாலைகளுக்கு சென்ற பிரதமர், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், வகுப்பறை சூழல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகள் குறித்து ஆராய்ந்தார்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் அறிமுகமான செயன்முறை அடிப்படையிலான கற்றல் அணுகுமுறைகள் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கின்றனவா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கபில ஜெயசெகற , R.M. ஜெயவார்டனா , மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண கல்வி செயலாளர் உள்ளிட்ட கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஆரம்பக் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வுப் பயணம் அமைகிறது.