சாரதிகளில் 60% பேர் போதைப்பொருள் அடிமை

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போது, இந்த கவலைக்கிடமான தகவலை அமைச்சர் வெளியிட்டார். மேலும் அமைச்சர் தெரிவித்ததன்படி, 2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 2,700 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அதே எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சுமார் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் என்பதுடன், மொத்த உயிரிழப்புகளில் 53 சதவீதமானோர் ஆண்கள் என அவர் குறிப்பிட்டார்.இந்த விபத்துகளில் சுமார் 50 சதவீதமானவற்றிற்கு சாரதிகளின் தவறான நடத்தையே காரணமாக இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், விபத்துகளில் தொடர்புடைய பெரும்பாலான சாரதிகள் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடும் சாரதிகள் குறித்து பஸ் சங்கங்களே அதிகளவில் தகவல்களை வழங்கியுள்ளதாக கூறிய அமைச்சர், கொழும்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் அடிமைத்தனத்தில் உள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.இதற்கிடையில், பெஸ்டியன் மாவத்தையில் நடமாடும் ஆய்வகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளில் சுமார் 53 பஸ்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவற்றில் 10 சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் அமைச்சர் விளக்கினார். இதன் மூலம் குறைந்தது 16 சதவீதமான சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என அவர் கூறினார்.

பரிசோதனைகள் நடைபெற்ற மறுநாள் பல சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காததை கவனித்ததாகவும், சோதனைகளை அஞ்சியே அவர்கள் பணிக்கு வரவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார். அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததால்தான் பணிக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது என அவர் கூறினார்.இந்த நிலைமையை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், சிகிச்சை பெற விரும்பும் சாரதிகளுக்கு தேவையான சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் சட்டத்தை மீறி செயற்பட அனுமதிக்கப்படமாட்டாது என்றும் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதனால் மட்டும் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது என்றும், அதற்கென தனிப்பட்ட பயிற்சி மற்றும் மதிப்பீடுகளுக்குப் பிறகு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அத்தகைய அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கே மீண்டும் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவுத்துள்ளார்.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660