கிரகரி வாவி கரையோரத்தில் புதிதாகப் பிறந்த சிசு சடலம் கண்டெடுப்பு
இன்று காலை நுவரெலியா நகரில் கிரகரி வாவி கரையோரப் பகுதியில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிரகரி வாவியில் படகு சவாரி மேற்கொள்ளும் ஊழியர்கள் மற்றும் உயிர்காப்பு பணியாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நுவரெலியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட தடயவியல் பரிசோதனைகளின் பின்னர், குறித்த சடலம் புதிதாகப் பிறந்த சிசுவினுடையது என உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சிசுவின் தொப்புள் கொடியின் ஒரு பகுதி இன்னும் இணைந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், இதனால் பிரசவம் வைத்தியசாலையில் இடம்பெறவில்லை என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொண்டு, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.