ஒரு விபத்து… ஒரு குடும்பத்தின் கனவுகள் சிதைந்த தருணம்
புத்தளம்-கற்பிட்டி, கண்டக்குளி கடற்கரை வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் குறித்த வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது, இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர், மேலதிக சிகிச்சை தேவையெனக் கருதி, அவர்கள் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அன்றைய தினமே அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சனிக்கிழமை (31) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர் நுரைச்சோலை கொய்யாவாடி, அரபா நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய முஹம்மது நிஜாம் என்பவராகும். அவர் ஒரு சிறு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்து புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.