சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய மறுசீரமைப்பு ஜனாதிபதியின் பார்வை
சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்த எந்த நாடும் அபிவிருத்தி அடையவில்லை என்றும், சட்டம் செயலிழக்கும் இடத்தில் குற்றவாளிகளின் ஆதிக்கமே நிலைநிறுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.நாட்டை மறுசீரமைக்கும் பயணத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற கொள்கைக்கு உயிரூட்ட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார். அதிகாரம், செல்வம் அல்லது அரசியல் செல்வாக்கு என்பவற்றின் மூலம் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தேசிய மட்ட நடவடிக்கை
தேசிய பேரழிவாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க முழு நாடுமே ஒன்றாக என்ற தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அரசியல் தலைமை, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்படும் ஒருங்கிணைந்த திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.இந்த திட்டத்தின் கீழ்:
போதைப்பொருள் விற்பனை வலையமைப்புகளை முறியடிக்கும் நடவடிக்கைகள்,சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைகள்,பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வாய்ப்புகள்
சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
போன்ற பல கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 91,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நூற்றுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆயிரக்கணக்கானோர் புனர்வாழ்வு திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொருளாதார நிலைத்தன்மை சவால்களை தாண்டிய பயணம்
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் கடன் பெறாமல் பேரழிவுகளை சமாளிக்கும் திறனை உருவாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாரிய சேதத்திற்குப் பின்னரும், அரசின் உள்நாட்டு நிதி மேலாண்மையின் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கினார்.மேலும், அரச சேவையை பலப்படுத்தும் நோக்கில் 2025 முதல் கட்டமாகவும், 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் தொடர்ந்து சம்பள உயர்வுகளுக்காக பெரியளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் சட்டத்தின் முன் சமத்துவம் 2026 உறுதியான வருடம்
சட்டம் சிலந்திவலை போல சிறியவர்களை மட்டும் சிக்கவைத்து, பெரியவர்களை விடுவிக்கும் நிலைமையை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறினார். 2026ஆம் ஆண்டு சட்டத்தின் முன் அனைவரும் சமன் என்ற கொள்கை நடைமுறையில் உறுதிப்படுத்தப்படும் வருடமாக அமையும் என அவர் உறுதியளித்தார்.மேலும்
எமது பிள்ளைகளுக்கான எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்
போதைப்பொருள் அடிமைத்தனம் நாட்டின் இளம் தலைமுறையை பாதிக்கும் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும், இதனை கிராமம் தோறும் ஒழிக்க நீண்டகாலத் திட்டமிட்ட செயற்பாடு அவசியம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
போதைப்பொருள் கடத்தல் பாதைகளை முடக்க கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்படுகின்றன என்றும், விநியோக வலையமைப்புகளை ஒழிக்க பொலிஸ் மற்றும் அதிரடிப்படைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.பாதிக்கப்பட்டவர்களை சமூகத்துடன் மீண்டும் இணைக்க நாடு முழுவதும் புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், மதத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து தேசிய அளவிலான ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் அனைவரும் பொறுப்புணர்வுடன் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.