விவசாயப் பண்ணைகள் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பான முயற்சிகள் குறித்து ஆராய்வு
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகள் மற்றும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி இடையே முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி. சில்வா ஆகியோருக்கிடையிலான இந்த விசேட சந்திப்பு இன்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. கடந்த 27ஆம் திகதி யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் சில்வா, ஆளுநரை சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்து இந்த கலந்துரையாடலை நடத்தினார்.
சந்திப்பின் போது, பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம், மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய புதிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் மற்றும் அதற்கான நடைமுறை வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாகவும் ஆளுநர் கருத்துக்களை முன்வைத்தார். கடந்த காலங்களில் பாதுகாப்புத் தரப்பினரால் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகள் மற்றும் ஆதரவுகள் குறித்தும் இரு தரப்புகளுக்கிடையே கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.இந்த கலந்துரையாடல், வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் நில உரிமைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான எதிர்கால தீர்வுகளுக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.