பிரபல திரைப்பட நடிகர் ஹேமால் ரணசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகர் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டமைக்கு உரிய காரணங்களை வெள்ளவத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக விளக்கமளித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 8ஆம் திகதி, வெள்ளவத்தை ஹவ்லொக் சிட்டி வணிக வளாகத்தில் அமைந்துள்ள திரையரங்கிற்கு முன்னால் நடைபெற்ற புதிய திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வின்போது, அங்கு பணியில் இருந்த விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவரை தாக்கியதாக ஹேமால் ரணசிங்க மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பலமுறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் அதற்கு பதிலளிக்காமல் தவிர்த்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (03) தனது சட்டத்தரணியுடன் இணைந்து வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான தருணத்தில், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான CCTV காணொளி ஆதாரங்கள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டு, கல்கிசை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணை அறிக்கைகளுடன் இன்று அவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.