சம்மாந்துறை சுற்றுச் சந்தி விவகாரம்

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி (Roundabout) கட்டுமானத்திற்கு எதிராக, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிரால் தாக்கல் செய்த வழக்கு இன்று (03) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி மூலம் அபிவிருத்திப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையும், அந்தப் பிரதேசத்திற்குரிய உள்ளூராட்சி மன்றத்தின் முன் அனுமதி பெற்ற பின்னரே நடைமுறைக்கு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதி இன்றியே, பல தொழில்நுட்பக் குறைபாடுகளுடன் ஆண்டியர் சந்தியில் சுற்றுச் சந்தி உள்ளிட்ட அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், அவை சட்டத்திற்கு முரணானவை எனவும் குறிப்பிட்டு, அவற்றை உடனடியாக நிறுத்துமாறு கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் மற்றும் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, வழக்கை தொடர்வதற்கான சட்டப்பூர்வத் தகுதி தொடர்பில் பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்தார். எனினும், அவற்றை நிராகரித்த நீதிவான், வழக்கை காரணங்காட்டல் விசாரணைகளுக்காக திகதியிட்டார்.

மேலும், கடந்த 20.01.2026 அன்று ஆண்டியர் சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தைக் குறிப்பிட்ட நீதிவான், குறித்த சந்தியில் சேதமடைந்துள்ள வீதியை செப்பனிடுவது தொடர்பில் மனுதாரரின் நிலைப்பாட்டை கேட்டறிந்தார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், ஆண்டியர் சந்தியில் சேதமடைந்துள்ள வீதியை புனரமைக்குமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைத்து வருவதாகவும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட வீதிப் பகுதியை மட்டுமே செப்பனிடுவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் மன்றுக்கு தெரிவித்தார்.

அதேவேளை, சட்டமுரணாக மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுச் சந்தி மற்றும் நடைபாதை உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தற்போதுள்ள நிலைமை தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும் எனக் கட்டளையிடுமாறு அவர் கோரினார்.

இதனை பரிசீலித்த நீதிவான், இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் ஆண்டியர் சந்தியில் குன்றும் குளியுமாக சேதமடைந்துள்ள வீதிப் பகுதியை மட்டும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக செப்பனிடுமாறும், சுற்றுச் சந்தி மற்றும் நடைபாதை தொடர்பில் எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும், முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு அமைவாக தற்போதுள்ள நிலைமை அப்படியே பேணப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 21.04.2026 அன்று பிரதிவாதிகள் சார்பான காரணங்காட்டல் விசாரணைகளுக்காக மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660