ஒரே நாளில் 10 பேர் பலி, காசாவில் பதற்றம் உச்சம்

காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டு வரும் தீவிர இராணுவ நடவடிக்கைகளின் விளைவாக, நேற்றைய தினம் மட்டும் குறைந்தது 10 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமை சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) தொடர்பான இராஜதந்திர மட்டச் சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவ் சம்பவம் காசாவில் நேற்று காலை பல பகுதிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதல்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. துஃப்பா (Tuffah) பகுதியில் அகதிகள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண் குழந்தைகள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். அதேபோல், செய்தூன் (Zeitoun) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு பெண் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் உள்ள ஒரு கூடாரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் மூன்று பேர் பலியாகினர். இதனிடையே, வடக்கு காசாவில் பலஸ்தீனிய தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கு இணையாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் எரிக்கோ (Jericho) நகரில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 24 வயதுடைய சயீத் நயீல் அல்-ஷேக் (Saeed Na’el al-Sheikh) என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்ததுடன், மேலும் வேறு பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் இராணுவ வாகனம் மோதி ஒரு பெண் காயமடைந்துள்ளார். சில இடங்களில் பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இஸ்ரேல்,பலஸ்தீன் விவகாரங்களை கண்காணிக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் முக்கிய அதிகாரிகளான இயக்குநர் ஒமர் ஷாகிர் (Omar Shakir) மற்றும் ஆய்வாளர் மிலெனா அன்சாரி (Milena Ansari) ஆகியோர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். பலஸ்தீனிய அகதிகளின் மீள்குடியேற்ற உரிமையை இஸ்ரேல் மறுப்பது மனித நேயத்திற்கு எதிரான குற்றமாகும் என குறிப்பிடும் அறிக்கையை வெளியிட HRW தலைமையகம் அனுமதி வழங்காததே இந்த இராஜினாமாவுக்கான காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும், காசாவிலிருந்து எகிப்திற்குச் செல்லும் ஒரே நுழைவாயிலான ரஃபா (Rafah) கடவையில் இஸ்ரேலிய அதிகாரிகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக தினமும் 50 பேருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டிய நிலையில், நேற்றயமுன்தினம் 16 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் எந்தவித தெளிவான காரணங்களுமின்றி இந்த அனுமதிகள் மறுக்கப்படுவதாகவும், நோயாளிகள் அம்புலன்ஸ்களில் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Share this article:

Related News

AD
Advertise Here!

விளம்பரத்திற்கு இப்பொழுதே

Chat Now
Popular News
Get In Touch

Batticaloa

info@eastmirror.lk

+94 75 0550 660

Follow Us

About us
Privacy Policy
Terms and condition
Website Designed and Developed by Kingsparrow Group of Companies(PVT)LTD +94750550660